விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி பகுதியில், மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே, பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Advertisment

இந்த மாநாடு நடைபெற உள்ள இடத்தை துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அவர் நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisment

சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். ஆய்வின் போது, மேடை அமைக்கும் இடம், வாகன நிறுத்துமிடங்கள், இளைஞர் அணியினர் அமர்விடங்கள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன், திமுக இளைஞரணி சார்பில் ‘வெல்வோம் 200; படைப்போம் வரலாறு’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, இளைஞரணியை வலுப்படுத்துதல், பாசிச சக்திகளை எதிர்த்தல், புதிய வாக்காளர்களை ஈர்த்தல் மற்றும் திமுக தலைவர்  மு.க. ஸ்டாலினின் ‘மிஷன் 2.0’ திட்டத்திற்கு ஆதரவு திரட்டுதல் ஆகிய நோக்கங்களுடன், மாநிலம் முழுவதும் மண்டல அளவிலான இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்த மாநாடு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மேற்கொள்ளவுள்ள அரசியல் பிரச்சாரத்தின் முன்னோட்டமாகவும் கருதப்படுகிறது.