பா.ம.கவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அன்புமணி பா.ம.கவை தனக்கு சொந்தப்படுத்தி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணியிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்து வருகிறார். அதே சமயம், அதிமுக கூட்டணியில் அன்புமணி இருப்பதால், அந்த கூட்டணியில் இணைய முடியாத சூழல் ராமதாஸுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அன்புமணிக்கு எதிர்திசையில் இருக்கும் கூட்டணியில் இணைய ராமதாஸ் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் திமுக கூட்டணியில் இணைவதற்கு ராமதாஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகச் சொல்லப்பட்டது. அதாவது சில வருடங்களுக்கு முன்பே பா.ம.க, பா.ஜ.க இருக்கும் கூட்டணியில் கண்டிப்பாக இணையமாட்டோம் என்று திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனால் ராமதாஸை கூட்டணியில் இணைப்பதற்கு திமுக தலைமை தயக்கம் காட்டுவதாகவும், திருமாவளவன் சம்மதம் தெரிவித்தால் கூட்டணியில் சேர்க்க வாய்ப்புள்ளது என திமுக கண்டிஷன் போட்டதாகவும் கூறப்பட்டது. அதனால் ராமதாஸ் தரப்பினர், திருமாவளவனுக்கு இணக்கம் காட்டி வந்தனர். ஆனால், ராமதாஸை கூட்டணிக்குள் இணைப்பதற்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மூலம் இன்னும் ஓரிரு நாட்களில் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/vjramad-2026-01-27-10-35-50.jpg)