source says US military hit on Venezuela? and people in panic
வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா குண்டு வீசி ராணுவத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெனிசுலா குற்றம் சாட்டியுள்ளது.
வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று (03-01-26) அதிகாலை குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதனால் நகரம் முழுவதும் கட்டிடங்கள் தீப்பிடித்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக லாகார்லோட்டா விமான நிலையத்தில் கரும்புகை கிளம்பியதால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் அந்நாட்டின் தலைநகர் கராகஸைச் சுற்றி பல வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், நகரின் தெற்குப் பகுதியான ஒரு பெரிய இராணுவத் தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மிராண்டா, அரகுவா மற்றும் லா குவைரா ஆகிய இடங்களிலும் வான்வழித் தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலால் வெனிசுலா மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். வெனிசுலா மீது நடந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும், அமெரிக்கா தான் இந்த ராணுவத் தாக்குதலை நடத்தியிருக்கிறது என வெனிசுலா அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அரசு கூறுகையில், ‘வெனிசுலா பிரதேசம் மற்றும் மக்களுக்கு எதிராக அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட மிகக் கடுமையான இராணுவ தாக்குதலை வெனிசுலா கண்டிக்கிறது’ எனத் தெரிவித்தார்.
வெனிசுலாவில் இருந்து கப்பல்கள் வழியாகவும் படகுகள் வழியாகவும் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால் கடந்த சில நாட்களாகவே, கரீபியன் கடல் பகுதியில் ராணுவத்தை குவித்து ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க ராணுவம் கரீபியன் கடல் பகுதியில் வெனிசுலா கப்பல்கள் மீது தாக்கல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், வெனிசுலாவில் குண்டுவெடிப்பு தாக்குதல் அரங்கேறியுள்ளது.
Follow Us