பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், முதல்வர் பதவியில் இருந்து விலக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதனை தொடர்ந்து நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் 10வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். அதன்படி, அம்மாநிலத்தில் தேசிய ஜனநாயககக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், அவர் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை தேர்தலுக்காக நாளை (05-03-26) வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பீகாரின் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அம்மாநிலத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், பா.ஜ.கவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பீகாரின் முதல் முதல்வர் என்று சொல்லப்படுகிறது. அதே போல் துணை முதல்வராக நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் பதவி ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவைப் பதவிக்காக நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிதிஷ் குமார், மார்ச் 16ஆம் தேதி நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 1990களில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தது. 2014இல் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்த நிதிஷ் குமார், 2015இல் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து அம்மாநில சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வராக பணியாற்றினார். அதன் பின்னர், அந்த கூட்டணியில் இருந்து விலகி 2017இல் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.

Advertisment

இதனையடுத்து, பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார் 2022இல் மீண்டும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக, நிதிஷ் குமார் எடுத்த முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது. இதனிடையே நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்தும் பீகாரில் இருக்கும் மகா கூட்டணியிலிருந்தும் விலகி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். அதனை தொடர்ந்து பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து தொடர்ச்சியாக 10வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். கடந்த 2015ஆம் ஆண்டு தற்போது வரையிலான 11 ஆண்டுகளில் அவர் தொடர்ச்சியாக முதல்வராக பதவி வகித்து வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.