source says BJP in alliance talks with Vijay?
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்திய நடிகர் விஜய், பா.ஜ.கவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் பிரகடனப்படுத்தினார். அதற்கு வழிவகுக்கும் விதமாக, பா.ஜ.கவுக்கு பிடிக்காத பெரியாரை தனது கொள்கைத் தலைவராக விஜய் அறிவித்தார். இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தவெக வர வேண்டும் என பா.ஜ.கவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனிடையே விஜய், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டாலும், பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததாலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, விஜய் தலைமையிலான கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளதாக தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, திமுகவை தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வந்த விஜய், மதுரை மாநாட்டிற்கு பிறகு அதிமுக, பா.ஜ.க ஆகிய கட்சிகளை விமர்சிக்க தொடங்கினார். இருப்பினும் திமுக அரசை வீழ்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தவெக வர வேண்டும் என அதிமுக, பா.ஜ.க ஆகிய கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 41 பேர் பலியாகினர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். இதனால் திமுக அரசு, தவெக அழுத்தம் கொடுப்பதாக பா.ஜ.க ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு ஏற்றார் போல், இந்த சம்பவத்தில் திமுக அரசு தான் விஜய்க்கு எதிராக திட்டமிட்டு சதி செய்ததாக பா.ஜ.க கருத்து கூறி வருகிறது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த விஜய், சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில், சி.எம் சார் பழிவாங்க வேண்டுமென்றால் என்னை பழிவாங்குகள், தொண்டர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று குற்றம் சாட்டினார். இது திமுக - தவெக இடையே கருத்து மோதல் ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், கரூரில் நடந்த சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களைப் பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்குத் தலைமைப் பண்பு இல்லை என்றும் கூறி தவெக கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கரூர் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, விஜய் மீது ஹிட் அண்ட் ரன் வழக்குப்பதிவு செய்து விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கரூர் சம்பவத்தை அடுத்து விஜய்க்கு நெருக்கடி அதிகரித்திருக்கும் நிலையில், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர், கூட்டணி தொடர்பாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய்க்கு ஆதரவாக துணை நிற்பதாக பா.ஜ.க மேலிடம் உறுதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூருக்கு விஜய் செல்லாததும், நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்யுடன் பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வரும் தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.