தற்காலத்தில் சமூக வலைத்தளங்கள் அனைத்துத் தரப்பு மக்களாலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள் எனக்  குறைந்த வயதிலிருக்கும் இளம் பருவத்தினரும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பொதுவாக, நீண்ட நேரம் லேப்டாப் மற்றும் செல்போன்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் உடல் ரீதியான பிரச்சினைகளும், மன ரீதியிலான பிரச்சனைகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் வரும் காட்சிகளுக்கு (தகவல்கள்) சிறுவர்கள் எளிதில் ஆட்படுத்தப்படுவதால், பல சமயங்களில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. இத்தகைய, காரணங்களால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையை மாற்றும் வகையில் ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள ஆந்திரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது குறித்து கடுமையான விதிமுறைகளை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

Advertisment

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், “குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட சிறுவர்களால், சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. எனவே, அவர்கள் சமூக வலைத்தளங்களால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும். அதனால், இது சம்பந்தமாக முறையான சட்டம் கொண்டுவருவது காலத்தின் தேவையாக இருக்கிறது. மேலும், குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது” என்று பேசியிருந்தார்.  

இதன் மூலம் ஆந்திராவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உலகில் ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில், ஒரு மாநில அரசு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.

Advertisment