திருவள்ளூர் மாவட்டம், நுங்கம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் - ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு விக்னேஷ் (26 வயது) மற்றும் கணேஷ் (24 வயது) என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக மோகன் ஒரு ஆண்டுக்கு முன்பு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால், ஜெயலட்சுமி தனது இரு மகன்களுடன் கம்மார்பாளையத்தில் தனியாக வாழ்ந்து வந்தார்.

ஜெயலட்சுமியின் இளைய மகன் கணேஷ், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அங்கு பணிபுரியும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்தார். இவர்கள் அடிக்கடி செல்போனில் பேசியும், தனிமையில் சந்தித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. இது ஜெயலட்சுமிக்குத் தெரியவந்ததும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணேஷைக் கண்டித்துள்ளார்

இதற்கிடையே, ஜெயலட்சுமியின் மூத்த மகன் விக்னேஷ், நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையாகி, அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனையும் ஜெயலட்சுமி கடுமையாகக் கண்டித்தார். இருப்பினும், இரு மகன்களும் தாயின் பேச்சைப் பொருட்படுத்தாமல் தங்கள் வழியில் தொடர்ந்தனர். 

மகன்களின் செயல்களால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, கடந்த ஜூலை 25 அன்று இரவு 8 மணியளவில், இரு மகன்கள் முன்னிலையில், "என் பேச்சைக் கேட்காமல் உங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொள்கிறீர்கள்... இதற்கு மேல் நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?" என்று கூறி, கையில் இருந்த விஷத்தைக் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது, விக்னேஷும் கணேஷும் தாயின் கையிலிருந்த விஷத்தைப் பிடுங்கி அவர்களும் குடித்தனர். பின்னர் இருவரும் கீழே விழ, ஜெயலட்சுமி அலறி துடித்தார். அவரது அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக இருவரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று கணேஷும், இன்று விக்னேஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

Advertisment

இச்சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மகன் காதலித்ததையும், மற்றொரு மகன் மது அருந்துவதையும் தாய் கண்டித்ததால், சகோதரர்கள் இருவரும் தாய் முன்னிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.