ஹரியானா மாநிலத்தில் கடந்த 2024 சட்டப்பேரவை தேர்தலின் போது, போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி முன்னாள் காங்கிரஸ் மகளிரணி நிர்வாகி மற்றும் அவரது கணவரிடமிருந்து ரூ.7 கோடி லஞ்சம் பெற முயன்றதாகச் சோனியா காந்தி குடும்பத்தினர் மீது ஹரியானா மாநில பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லியில் நேற்று (03-03-26)  செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி இது பற்றிக் கூறுகையில், “பிரியங்கா காந்தி உட்படக் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் தனி உதவியாளர்கள் உடனான தனது வாட்சப் உரையாடல்களை வெளியிட்டுள்ளார் ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் மகளிரணி பொதுச் செயலாளரின் கணவர் கவுரவ் குமார். 

Advertisment

இந்த வாட்சப் உரையாடல்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர்களின் ஊழலுக்கு இது முதற்கட்ட ஆதாரங்களாகும். குறிப்பாக, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பவல் பேரவை தொகுதியில் தனது மனைவி போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, தங்களிடமிருந்து எவ்வாறு அந்த குடும்பத்தினர் பணம் பெற முயன்றார்கள் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் மற்றும் கே. சுரேஷ் ஆகியோர்களின் தனி உதவியாளர்களுடனான உரையாடல்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 

Advertisment

இதிலிருந்து, தங்கள் கட்சியில் உள்ள பெண் நிர்வாகியிடம் பணத்தைப் பெறுவதற்கு கே.சி.வேணுகோபாலை சோனியா குடும்பம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விஷயத்தில் சோனியா குடும்பம் இன்னும் மௌனம் சாதித்து வருகிறது. இதில், குற்றத்தை ஒப்புக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பில்லை" எனத் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் கடந்த 2024 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 48 இடங்களை வென்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் 37 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.