மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆண்டுக்கு 100 நாட்கள் நடக்கும் இத்திட்டத்தை 100 நாள் வேலை திட்டம் என்றும் மக்கள் அழைத்து வருகின்றனர். கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தால் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறுகின்றனர். 

Advertisment

இந்த திட்டத்தின் பெயரை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டமாக கொண்டு வர திட்டமிட்டது. மேலும் இதுவரை வழங்கி வந்த 90 சதவித நிதியை 60 சதவிதமாக குறைத்து திருத்தம் செய்தது. அதோடு 40 சதவித நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் 100 நாட்கள் இருந்த வேலையை 125 நாட்களாகவும் உயர்த்தியது. 

Advertisment

இத்திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை மாற்றி இந்தி மொழியில் பெயர் வைக்கப்படுவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் கடந்த 16ஆம் தேதி நாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் புதிய திட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எதிர்க்கட்சிகளிடம் ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கட்சி விவகாரம் அல்ல தேச நலன் சார்ந்தது. மத்திய அரசின் சட்டம் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான புல்டோசர் தாக்குதல். இப்போது, எங்கே யாருக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை தில்லியில் அமர்ந்திருக்கும் அரசால் எப்படி முடிவு செய்ய முடியும் என்பது கேள்வி. எதிர்க்கட்சிகளிடம் கருத்து கேட்காமல் திட்ட வடிவத்தை தன்னிச்சையாக மாற்றியுள்ளது. கருப்பு சட்டத்திற்கு எதிராக போராடுவோம்” என்றுள்ளார். 

Advertisment