கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இடைக்கோடு முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சிகாமணி (70). கூலித் தொழிலாளியான இவருக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 4 மகன்களில் மூன்று பேருக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி அதே பகுதியில் வசித்து வருகின்றனர். கடைசி மகனான 37 வயதான சுனில் குமாருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தந்தை சிகாமணியின் இடது கால் அகற்றப்பட்டது. அதன்காரணமாக நடமாடக் கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதனால் மகன்கள் சேர்ந்து அவர்களது வீட்டிற்கு அருகிலேயே தனியாக ஒரு சிறிய அறை அமைத்து தங்க வைத்து கவனித்து வந்துள்ளனர்.
திருமணமாகாத கடைசி மகனான சுனில் குமார் தந்தையுடன் தங்கி வந்துள்ளார். மேலும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு சுனில் குமார் மற்றும் தந்தை சிகாமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த மகன் சுனில் குமார் தந்தையை கொன்று விடுவேன் என்று கூறி பெயிண்டில் கலக்க வைத்திருந்த டின்னரை எடுத்து அவரது உடல் முழுவதும் ஊற்றியுள்ளார். பின்னர் தந்தை என்று கூடப் பார்க்காமல் தீ வைத்துக் கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
படுத்த படுக்கையாக இருந்த சிகாமணிக்கு எழுந்திரிக்கக் கூட முடியாததால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே எதுவும் நடக்காதது போல் அடுத்த நாள் காலையில் வீட்டில் வந்து உறங்கிக் கொண்டிருந்த சுனில் குமாரை பழுகல் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிகாமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பழுகல் போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்து சுனில் குமாரைச் சிறையில் அடைத்தனர். போலீசாரின் விசாரணையில் சொத்துப் பிரச்சனை காரணமாக இந்தக் கொலை நடந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தந்தையை மகன் டின்னர் ஊற்றித் தீ வைத்துக் கொளுத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us