தாய்க்கு பேய் பிடித்துள்ளதாக மகன் கூறியதன் பேரில், 55 வயது பெண்ணை இரவு முழுக்க கொடூரமாக அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கீதம்மா (55). இவரது மகன் சஞ்சய். கடந்த சில நாட்களாக கீதம்மாவின் நடவடிக்கையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது தாயாருக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து, ஆஷா என்ற பேயோட்டும் பெண்ணிடம் தனது தாய் கீதம்மாவை சஞ்சய் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கீதம்மாவின் உடலில் இருக்கும் ஆவியை விரட்ட ஒரு சடங்கு செய்ய வேண்டும் என ஆஷா கூறியுள்ளார். இந்த சடங்கை செய்ய சஞ்சய்யும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி சம்பவம் நடந்த தினத்தன்று, ஆஷா தனது கணவர் சந்தோஷுடன் கீதம்மாவின் வீட்டிற்குச் சென்று பேய் விரட்டும் சடங்கை செய்துள்ளார். அந்த சடங்கின் போது, கீதம்மாவின் தலையைச் சுற்றி எலுமிச்சை பழத்தை சுழற்றி, அதே எலுமிச்சையால் அவரது தலையில் அடித்துள்ளார். அதன் பின்னர், எலுமிச்சையை இரண்டு பகுதிகளாகப் பிளந்து கீதம்மாவின் தலைமுடியில் தேய்ந்து அடித்துள்ளார். அதன் பின்னர், கீதம்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து பலமுறை அறைந்து தாக்கியுள்ளார். அதனை தொடர்ந்து, ஒரு குச்சியை எடுத்து கீதம்மாவை மீண்டும் மீண்டும் அடித்து தாக்கியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாத கீதம்மா கதறி துடித்துள்ளார். இருப்பினும், இரவு 9 மணியளவில் தொடங்கி அதிகாலை 1 மணி வரை ஆஷா கீதம்மாவை தொடர்ந்து தாக்கியுள்ளார். இதனால், பலத்த காயமடைந்த கீதம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.

கீதம்மாவை ஆஷா தொடர்ந்து தாக்கும் சம்பவத்தை அங்கிருக்கும் நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தலைவிரியோடு கோலத்தோடு கலைந்த நிலையில் தரையில் அமர்ந்திருக்கும் கீதம்மாவை, ஆஷா குச்சியால் தொடர்ந்து தாக்குகிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சஞ்சய், ஆஷா மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.