பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அன்புமணி ராமதாஸ் 100 நாட்களுக்கு உரிமை மீட்டு பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும் என்கிற பிரச்சார பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் ராமதாஸ் இன்று (02.08.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பொதுவாக ஒரு பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என்றால்15 நாளைக்கு முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கை அனுப்ப வேண்டும். அதனால் நான் முறையாக 17ஆம் தேதி பொதுக்குழுவை அறிவித்திருக்கிறேன். அதே சமயம் வேறு எவரும் பாட்டாளி மக்கள் கட்சி பெயரில் பொதுக்குழு கூட்டுவோம் என்று சொல்வது சட்டத்திற்கும் கட்சி விதிகளுக்கும் புறம்பானது. உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறானா?. இருக்கிறது. அதுவும் என்னை வேவு பார்த்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக விழுப்புரம் மாவட்டம் இளையனூர் காவல்துறை இன்ஸ்பெக்டரை வரவழைத்து புகார் கொடுத்தேன்.
அதே போன்று சைபர் கிரைம் என்ற துறையிடமும் புகார் கொடுத்திருக்கிறேன். அந்த சிப் அண்ட் மோடம் அதை எல்லாம் கூட காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறோம். ஒரு பக்கம் சைபர் கிரைம் காவல்துறை, இன்றொன்று நானே ஒரு ஸ்பெஷல் ஏஜென்சியை அமர்த்தி அவர்கள் இது எப்படி எங்கிருந்து யாரால் இயக்கப்படுகிறது என்று அதையும் ஆய்வு செய்திருக்கிறோம். அவர்களும் விரைவில் அது சம்பந்தமாக எனக்கு அறிக்கை கொடுப்பார்கள். இது பிரைவேட் ஏஜென்சி என்பது காவல் துறைக்கும் சைபர் கிரைமுக்கும் உதவுவதற்காகத் தான் அது உதவியாக இருக்குமே தவிர வேறு ஒன்றும் இருக்காது” எனப் பேசினார்.
முன்னதாக ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், “என் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி இருந்ததைக் கண்டறிந்து எடுத்துள்ளோம். வீட்டில் நான் அமரும் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்தது. லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்ட விலை உயர்ந்த ஒட்டு கேட்கும் கருவியை என் நாற்காலிக்கு அருகில் வைத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.