தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே தெற்கு கோவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான செல்வகுமார். இவர் பழைய காயல் பகுதியில் தனியார் தொழிற்சாலை குடியிருப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வளர்மதி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். செல்வகுமாருக்கும் அவரது அண்ணன் விஜயகுமார் குடும்பத்துக்கும் இடையே வாழைத் தோட்ட உரிமை, ‘உனக்கா... எனக்கா...’ என்கிற சொத்துப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

Advertisment

இந்நிலையில், செல்வகுமார் 11-ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு, வழக்கம்போல மாலையில் வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பழைய காயலில் இருந்து கோவங்காடு செல்லும் சாலையில் வந்தபோது, மூன்று பேர் கொண்ட மர்மக் கும்பல் செல்வகுமாரை வழிமறித்து, அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியது. இதில் அவரது வயிறு, மார்பு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்து, ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதையடுத்து, அந்தக் கொலைக் கும்பல் தப்பி ஓடிவிட்டது. அந்த வழியாக வந்தவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செல்வகுமாரை மீட்டு, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே செல்வகுமார் உயிரிழந்தார். திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ் குமார், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. நிரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Advertisment

இது தொடர்பாக செல்வகுமாரின் மனைவி வளர்மதி அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப் பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார், கொலையான செல்வகுமாரின் அண்ணன் விஜயகுமாரின் வீட்டுக்கு சந்தேகத்தின் பேரில் சென்றபோது, வீடு பூட்டிக் கிடந்தது. அந்த வீட்டில் இருந்த அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். போலீசாரின் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பின், விஜயகுமாரின் மகன்களான சந்திரசேகர், அசோக்குமார், ராஜேஷ் குமார் ஆகியோரை ஏர்போர்ட் அருகே சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவந்திருக்கிறது. 

செல்வகுமாருக்கும் அவரது அண்ணன் விஜயகுமார் குடும்பத்துக்கும் வாழைத் தோட்ட சொத்துப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு செல்வகுமாரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை அவரது அண்ணன் மகன்கள் வெட்டிச் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், தனது அண்ணன் விஜயகுமாரின் மனைவி விஜயலட்சுமியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, இரு குடும்பங்களுக்கும் இடையே முன்விரோதம் மேலும் தீவிரமடைந்தது. இதனால், செல்வகுமார் தனது குடும்பத்துடன் இடம்பெயர்ந்து பழைய காயலில் குடியேறியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, செல்வகுமார் மீண்டும் கோவங்காட்டுக்கே வந்து குடியேறியுள்ளார்.

Advertisment

தனது தாயை அரிவாளால் வெட்டியதால் ஆத்திரத்தில் இருந்த ராஜேஷ் குமார், செல்வகுமார் சொந்த ஊருக்கு மீண்டும் குடும்பத்துடன் வந்து குடியேறியதை அடுத்து, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார். ராஜேஷ் குமார், 2024 ஆம் ஆண்டு வேறொரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, கூலிப்படையைச் சேர்ந்த சேர்வைக்காரன் மடம் பாலமுகேஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நெட்வொர்க் மூலம் திட்டம் தீட்டி, 25 வயதான ராஜேஷ் குமார், 21 வயதான பாலமுகேஷ், 19 வயதான பாலவிக்னேஷ், 20 வயதான சபரிவாசன் ஆகியோர் சேர்ந்து, 11-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த செல்வகுமாரை வழிமறித்து, கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

வாழைத் தோட்டத்தில் தொடங்கிய குடும்பத் தகராறு கொலையில் முடிந்திருப்பதும், அண்ணன் மகனே கூலிப்படையை ஏவி சித்தப்பாவைக் கொலை செய்திருப்பதும் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி