Advertisment

தாயுடன் நெருங்கி பழகிய ஆட்டோ டிரைவர்; காவு வாங்கிய மகன் - கோவில்பட்டியில் கொடூரம்!

Untitled-1

கோவில்பட்டி இலுப்பை ஊரணி NGO காலனியைச் சேர்ந்தவர் 31 வயதான மாரிச்செல்வம். இவர் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவிலில் கடந்த ஒரு சில மாதங்களாக செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பூஜை நடத்தும் பூசாரியாகவும் இருந்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மாரியம்மாள் தற்போது மூன்றாவது குழந்தையைக் கர்ப்பமாகச் சுமந்து வருகிறார்

Advertisment

இந்நிலையில் செப்டம்பர் 4-ம் தேதி இரவு 9 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மாரிச்செல்வத்தின் வீட்டுக்கு வந்து ஆட்டோவை சவாரிக்கு அழைத்துள்ளனர். அதன் பேரில் வீட்டிலிருந்து புறப்பட்டு, சிறுவர்கள் இருவரையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மாரிச்செல்வம் சென்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் மாரிச்செல்வம் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது மனைவி மாரியம்மாள், மாரிச்செல்வத்தின் மொபைலுக்கு தொடர்புகொண்டபோது அழைப்பு ஏற்கப்படவில்லை. இந்நிலையில் அடுத்த நாள் காலையில் ஆட்டோ டிரைவர் மாரிச்செல்வம் கோவில்பட்டி சண்முகநகர் சுடுகாட்டில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி. ஜமால், இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சண்முகம், செந்தில்வேல் முருகன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தி குற்றவாளிகளைத் தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில், மாரிச்செல்வத்தின் ஆட்டோவை சவாரிக்கு அழைத்துச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவனின் தாய்க்கும், ஆட்டோ டிரைவர் மாரிச்செல்வத்துக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. பூக்கடை ஒன்றில் வேலைக்குச் சென்று வந்த அந்தப் பெண்ணும் ஆட்டோ டிரைவர் மாரிச்செல்வமும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஊர் சுற்றியுள்ளனர்.

நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியிருந்தது. இதை அந்தப் பெண்ணின் மகனான 17 வயது சிறுவன் கண்டித்துள்ளான். மேலும் குடும்பத்துக்குள்ளும் இது விஷயமாகப் பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர் மாரிச்செல்வத்துக்கும் அந்த 17 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அங்குள்ள சந்தனமாரியம்மன் கோவில் ஆடி மாதக் கொடை விழாவின்போது ஒருவரை ஒருவர் கொலை செய்துவிடுவதாக சவால் விட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து கோபம் தலைக்கு ஏறி நிம்மதி இழந்த அந்த 17 வயது சிறுவன், தனது தாயுடன் உறவில் இருந்து வந்த ஆட்டோ டிரைவர் மாரிச்செல்வத்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளான். இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஆட்டோ டிரைவர் மாரிச்செல்வத்துடன் நட்பாக நடித்து அவ்வப்போது பேசி தொடர்பிலேயே இருந்து வந்துள்ளான்.

Advertisment

செப்டம்பர் 4-ம் தேதி இரவு நண்பனுடன் கஞ்சா போதையில் இருந்த அந்த 17 வயது சிறுவன், ஆட்டோ டிரைவர் மாரிச்செல்வத்தை மொபைலில் அழைத்துள்ளான். அவர் மொபைல் போனை எடுக்காததைத் தொடர்ந்து தனது நண்பனுடன் மாரிச்செல்வத்தின் வீட்டுக்குச் சென்றுள்ளான். அங்கிருந்த மாரிச்செல்வத்திடம் உறவினர் ஒருவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்து அவரை சவாரிக்கு பேசி அழைத்து வந்துள்ளான். சிறிது தூரம் சென்றதும் அந்த சிறுவன் தனது தந்தை, 51 வயதான முருகனையும் ஆட்டோவில் ஏற்றியுள்ளான். அதைத் தொடர்ந்து ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது சண்முகநகர் சுடுகாடு அருகே ஆட்டோவை நிறுத்தச் சொல்லியுள்ளான். ஆட்டோவை நிறுத்தியதும் கண்ணிமைக்கும் நொடியில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிறுவர்கள் இருவரும், 51 வயதான முருகனும் சேர்ந்து மாரிச்செல்வத்தை வெட்டியுள்ளனர். இவர்களிடமிருந்து தப்பித்து அலறியபடி ஓடிய மாரிச்செல்வத்தை ஓட ஓடப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று சண்முகநகர் சுடுகாடு பகுதியில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அங்கிருந்து இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரும் பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் முருகன் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் உட்பட 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர்களை திருநெல்வேலி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்; 51 வயது முருகனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

பெற்ற தாயுடன் தொடர்பில் இருந்த ஆட்டோ டிரைவரை சவாரிக்கு பேசி அழைத்துச் சென்று சுடுகாட்டில் ஓட ஓட விரட்டி 17 வயது சிறுவர்கள் கொலை செய்து வீசிவிட்டுச் சென்ற சம்பவம் கோவில்பட்டியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

mother police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe