உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் நூர்பால். இவரது மனைவி 40 வயதான லீலா. (‘இங்கே பெண்ணின் நலன் கருதி அவரது பெயர் மாற்றப்பட்டிருக்கிறது’ என்பதையும் சேர்த்துப் படிக்க வேண்டும்). இந்தத் தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், லீலாவிற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், லீலாவிற்கு தனது மைத்துனரின் மகனான மருமகன் பிரம்மா ஸ்வரூப் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரம்மா ஸ்வரூப், தனது அத்தை லீலாவைவிட ஐந்து வயது சிறியவர். இந்த நிலையில், இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. லீலாவின் கணவர் நூர்பால் ஓட்டுநராக இருப்பதால், அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே வேலைக்குச் சென்றுவிடுவார். அவர் இல்லாத நேரம் பார்த்து, மருமகன் பிரம்மா ஸ்வரூப் லீலாவின் வீட்டிற்குச் சென்று அவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் அந்தக் கிராமத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதுவரை கணவர் நூர்பாலுக்கு தெரியவில்லை; தனது உறவுக்காரப் பையன் தானே என்று நூர்பாலும் பிரம்மா ஸ்வரூப்பை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். ஆனால், கிராம மக்கள் இது குறித்து பேசத் தொடங்கியதும், மனைவி லீலாவை அழைத்து விசாரித்துள்ளார். அதில் மருமகன் பிரம்மா ஸ்வரூப்புடன் உறவு வைத்திருப்பதை லீலா ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இருவரும் மூன்று வருடங்களாகவே திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த நூர்பால், மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால், "நான் மருமகன் பிரம்மா ஸ்வரூப்புடன்தான் வாழ்வேன்" என்று குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த விவகாரம் இரு குடும்பத்தினர் மத்தியில் பூதாகரமாக வெடிக்க, திடீரென லீலா தனது மருமகன் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஷஹாபாத் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஷஹாபாத் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தனது மருமகன் பிரம்மா ஸ்வரூப்புடன் காவல் நிலையம் வந்த லீலா, "நான் வழக்கைத் தொடர விரும்பவில்லை; அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். அத்துடன், தாங்கள் கையில் வைத்திருந்த மாலைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு, பிரம்மா ஸ்வரூப் அத்தை லீலாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் இரு குடும்பங்களின் பரஸ்பர ஒப்புதலுடன் நடந்ததாகவும், மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில், சட்டப்படி விவகாரத்து பெறாமல் எப்படி வேறு ஒரு நபரை திருமணம் செய்ய முடியும் என்று இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய கணவர் நூர்பால், “நான் வேலைக்காக வெளியே செல்லும்போது, மருமகன் பிரம்மா சுவரேறி குதித்து என் மனைவியைச் சந்திப்பார். இதை நான் பல முறை எச்சரித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் உறவை தொடர்ந்து வந்துள்ளனர். முதலில் எனக்கு இதுகுறித்து தெரியாது. கிராமவாசிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மூலமாக இந்த உறவு எனக்கு தெரியவந்தது” என்று வேதனையுடன் விவரித்தார்.
சொந்த அத்தையை மருமகனே திருமணம் செய்து கொண்ட சம்பவம் ராம்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.