Advertisment

துணை குடியரசுத் தலைவரின் வருகை; அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் - விசாரணையில் அதிர்ச்சி!

2

துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தனி விமானம் மூலம் 28 ஆம் தேதி கோவை வந்தார். அவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட கொடிசியா அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், விழாவை முடித்துவிட்டு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யத் திட்டமிட்டிருந்தார்.

Advertisment

அதன் காரணமாக அவர் செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது ராதாகிருஷ்ணன் வரும் நேரத்தில், எதிர்பாராத வகையில் இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதைப் பார்த்த பாஜகவினர், கோவை போலீசாரின் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக இளைஞர்கள் உள்ளே நுழைந்ததாகக் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர், அங்கு வந்த துணை குடியரசுத் தலைவர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

Advertisment

இதனிடையே, தடைசெய்யப்பட்ட பகுதியில் நுழைந்த அந்த இரு நபர்கள் யார் என்று கோவை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர்கள் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த அனீஸ் ரகுமான், மற்றும் ஆசிக் என்பதும், அவர்கள் போதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக போதையில் இருந்த இளைஞர்கள் உள்ளே நுழைந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த கோவை மாநகர காவல் துறை, சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. எடிட் செய்யப்பட்டு, பேசும் இளைஞரின் முகம் மறைக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், போலீசார் பிடித்து அபராதம் விதிப்பார்கள் என்ற பயத்தில் ஒருவழிப் பாதையில் வேகமாகச் நுழைந்ததாகவும் அந்த இளைஞர் தெரிவித்திருக்கிறார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், சம்பவத்திற்குப் பாதுகாப்புக் குறைபாடு காரணமில்லை, குடிபோதைதான் காரணம் என்பதை வெளிப்படுத்த காவல் துறை தரப்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

c.b. rathakrishnan vice president of india
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe