பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மையில் பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கியிருந்தார்.
அண்மையில் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தார்.இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, ''ராமதாஸ் நல்ல உடல் நலத்துடன் நன்றாக இருக்கிறார். ராமதாஸ் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு போயிருக்கிறார். இந்த செக்கப் திட்டமிட்ட ஒன்றுதான். ஒரு மாதத்திற்கு முன்பே செக்கப் செய்ய வேண்டும் என ஒரு வாரத்திற்கு முன்னாடியே அதை உறுதிப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்.
ஆனால் ராமதாஸ் செக்கப் போனதை வைத்துக்கொண்டு சில பேர் போன் பண்ணி ''ஐயாவிற்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்க... ஐயாவுக்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்க...'' என்கிறார்கள். இதெல்லாம் அசிங்கமாக இருக்கிறது. ராமதாஸிற்கு இன்று 87 வயது. செக்கப்புக்கு போயிருக்கிறார். யார் யாரோ உள்ளே சென்று பார்த்துவிட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இது என்ன கண்காட்சியா? ராமதாஸின் உயிருக்கு என்ன பாதுகாப்பு. நான் இருக்கும் பொழுது காரிடோர் வரை கூட வர மாட்டார்கள். ராமதாஸின் பாதுகாப்பிற்காக உள்ளே விட மாட்டேன். ஆனால் இப்பொழுது நேரா கதவைத் திறந்து உடனே உள்ளே வந்து விடுகிறார்கள். தூங்க விட மாட்டேன் என்கிறார்கள். அவர் பாத்ரூமில் இருந்தாலும் ஐயா உங்களுக்கு போன் வந்துள்ளது எனக் கொடுக்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ஐயாவை வைத்து. ராமதாஸுக்கு ஏதாவது ஆச்சு தொலைத்துப் போட்டு விடுவேன். சும்மா இருக்க மாட்டேன். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனசெல்லாம் வெறி கோபத்தில் இருக்கிறேன் நான். ராமதாஸை வைத்துக்கொண்டு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் துப்பில்லாதவர்கள்'' என்றார்.