Solution within 45 days – Chief Minister launches 'Stalin with you' project Photograph: (dmk)
தமிழக அரசின் சார்பில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் இன்று (15.07.2025) கடலூர் மாவட்ட சிதம்பரத்தில் தொடங்கி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது . அதன்படி இந்த திட்டம் இன்று முதல் வரும் நவம்பர் மாதம் வரை செயல்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு 46 வகையான அரசுத் திட்டங்களின் சேவைகள் அனைத்தும் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முன்னதாக இந்த திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் விரைவு ரயில் மூலமாக நேற்று (14.07.2025) இரவு சிதம்பரம் சென்றடைந்தார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு தெரிவித்தனர்.
பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்பெறுவதற்காக அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகமே மக்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று அவர்களின் பிரச்சனையை தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்திற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. முதல் கட்டமாக நகரப்பகுதிகள் என்று சொல்லக்கூடிய இடத்தில் இந்த திட்டங்கள் நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரப்பகுதிகளிலும் முகாம்கள் நவம்பர் 2023 முதல் ஜனவரி 2024 வரை நடைபெற்றது. 9 லட்சத்து 5,000 மனுக்கள் பெறப்பட்டு அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.
அடுத்து இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதியில் சோதனை அடிப்படையில் முகாம்கள் நடத்தப்பட்டது. 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்றது. அந்த முகாம்களில் பெறப்பட்ட 95 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் அதிகாரபூர்வமாக தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.