கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் 300 மேற்பட்ட குடும்பங்களாக பட்டியல் சமூக மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வசிக்கும் சீனிவாசன் (வயது 70) என்பவர் காலமானார். இந்த நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுடுகாடு வசதி இல்லாமல் சாலையோர புறம்போக்கு இடங்களை பயன்படுத்தி வந்தனர். இத்தகைய சூழலில்  தான் சீனிவாசன் உடலை புறம்போக்கு இடத்தில் புதைக்க சென்ற போது அந்தப் பகுதியில் உள்ள நில உரிமையாளர் பிணத்தை இங்கே புதைக்க கூடாது என தடுத்து நிறுத்தினர்.

Advertisment

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாடு வசதி இல்லாமல் போராடி பெற்றிருக்கிற இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். எனவே இந்த இடம் பட்டியல் சமூகம் மக்களுக்காக சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடம் இந்த இடத்தை உடனடியாக சுடுகாட்டுக்கான இடம் என எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் இல்லை என்றால் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

Advertisment

இதனை அறிந்த காவல் ஆய்வாளர் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சுடுகாட்டுக்கு அருகே இருக்கிற தரிசு நிலம் 17 சென்ட் தொடர்ந்து சுடுகாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாக எழுத்துப்பூர்வமாக வழங்கினர். இதனை ஏற்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடலை அடக்கம் செய்தனர்.

உடனடியாக களத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய சிபிஎம் மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு ,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வாஞ்சிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நீதி வள்ளல், குறிஞ்சிப்பாடி சிபிஎம் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்ட குழு உறுப்பினர் சரவணன், மனிதன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லெனின் உள்ளிட்ட அனைவருக்கும் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சுடுகாட்டை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Advertisment