இங்கிலாந்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். தமிழர்களின் பெருமையையும், தமிழ்நாட்டின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் முகமாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்வாக, சமூக நீதியின் அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நாளை (04.09.2025) பேசுகிறார் ஸ்டாலின்.
இது குறித்து திமுகவினரிடம் பேசியபோது, "சமூக நீதி என்பது வெறும் அரசியலோ, வெற்று முழக்கமோ கிடையாது. தமிழ்நாடு அரசியலின் உயிர் நாடி அது. சாதி, மதம், மொழி, இனம், பாலினம் உள்ளிட்ட பாகுபாடு அற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க கனவு கண்டார் தந்தை பெரியார். தந்தைப் பெரியாரின் கனவை இன்று 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற உயரிய கொள்கை மூலம் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறார் முதலவர். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வரையறுத்த சமூக நீதி 1.0 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை சிந்தனையாக மாறியது ; களம் கண்டது. அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியினை சமூக நீதி 2.0 என்றழைக்கும் அளவுக்கு பல நல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரியார் கண்ட கனவு இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் நனவாகி வருகிறது.
'நான் பெரியாரின் பேரன்' என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது, சாதாரண வார்த்தை அல்ல; பெரியாரின் கொள்கைகளை திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றுவதால் வெளிப்படும் உணர்வுபூர்வமான சத்திய வார்த்தை. தமிழ்நாட்டின் பெண்களை பொருளாதார ரீதியாக உயர்த்தவும், அவர்களின் சுய மரியாதையை பாதுகாக்கவும் அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கான கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களில் காலனி என்ற வார்த்தையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களுக்கான விடுதிகள் அனைத்தும் சமூக நீதி விடுதிகள் என்று மாற்றிப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஸ்டாலின் உருவாக்கிய சமூக நீதி கண்காணிப்பு குழு - கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, மகளிர் உரிமை ஆகிய துறைகளில் சமூக நீதி முழுமையாக செயல்படுத்த உறுதி செய்கிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சுயமரியாதை இயக்கத்தின் நுாற்றாண்டையொட்டி, நாளை செப்டம்பர் 4-ந்தேதி, சர்வதேச புகழ் பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், பெரியாரின் உருவ படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றவிருக்கிறார் முதலவர் ஸ்டாலின்" என்று விவரிக்கிறார்கள். ஸ்டாலின் தலைமையில் உருவாகியுள்ள சமூக நீதி 2.0, எதிர்காலத்தை கட்டமைக்கும் அரசியலாக கவனிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னோடி மாநிலமாக, முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தும் சிந்தனையே ஸ்டாலினின் சமூக நிதி 2.0 என்றும் வர்ணிக்கப்படுகிறது.