Advertisment

லடாக் கலவரம்; சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடி கைது!

ladakhsonam

Social activist Sonam Wangchuk arrested in a major action for Ladakh riots

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு அளிக்கப்பட்டாலும், எதிர்ப்பும் எழுந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் எனத் தீர்ப்பளித்தது.

Advertisment

இதனிடையே, யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். ஆனால், அரசு அவர்களது கோரிக்கையைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 35 நாட்களுக்கான உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 10-ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வந்தார். அவருடன், லே தன்னாட்சிக் குழு உறுப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரின் உடல்நிலை 23-ம் தேதி அன்று மிகவும் மோசமானதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம், போராட்டக் குழு உறுப்பினர்களுடன் மத்திய அரசு அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் என்று 24-ம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மேலும், லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில், மருத்துவமனையில் இருக்கும் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, போராட்டம் தீவிரமடைந்தது. பா.ஜ.க. அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு, தீ வைத்துக் கொளுத்தினர்.

Advertisment

நிலைமையைச் சமாளிக்க, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைப் போலீஸார் விரட்டியடித்தனர். இதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, லடாக் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில், தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். அப்போது, லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவில்லை என்றால் நேபாளத்தைப் போன்று லடாக்கிலும் கலவரம் ஏற்படும் சோனம் வாங்சுக் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், லடாக்கில் நேற்று முன்தினம் (24-09-25) நடந்த கலவர வழக்கில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

riot sonam wangchuk LADAK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe