மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் பிரபல கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரும் துணைக்கேப்டனுமான இவர், அண்மையில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
இந்த சூழ்நிலையில், ஸ்மிருதி மந்தனாவுக்கும் பாலிவுட் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான பலாஷ் முச்சல் என்பவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு, மந்தனாவின் கண்களைக் கட்டி மும்பை டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்துச் சென்ற பலாஷ் முச்சல், அங்கு வைத்து அவருக்கு தனது காதலை வெளிப்படுத்தி மோதிரத்தை அணிவித்தார். அதே இடத்தில் ஸ்மிருதியும் அவருக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி சாங்லியில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் நடைபெறவிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. திருமணத்திற்கு முந்தைய நாள் சடங்கான மெஹந்தி விழாவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், திருமணத்தன்று காலை ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே பதறிப்போன அனைவரும் உடனடியாக ஸ்ரீனிவாஸ் மந்தனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில், ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நிறுத்தப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், தன்னுடைய திருமணம் நின்றுவிட்டதாக ஸ்மிருதி மந்தனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கையைப் பற்றி ஏராளமான ஊகங்கள் எழுந்துள்ளன. இந்த நேரத்தில் நான் வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்று நினைக்கிறேன். நான் மிகவும் தனிப்பட்ட நபர், அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன், ஆனால் திருமணம் நின்றுவிட்டது என்பதை நான் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விஷயத்தை இங்கே முடித்துவிட்டு, நீங்கள் அனைவரும் நல்லபடியாகச் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையையும் மதித்து, எங்கள் சொந்த பாதையில் எங்களுக்கு இடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தவரை நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடி கோப்பைகளை வெல்வேன் என்று நம்புகிறேன், அதில்தான் எனது கவனம் எப்போதும் இருக்கும். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. முன்னேற வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/07/smirti-2025-12-07-17-55-19.jpg)