நெல்லையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டதால் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனால் பாதி வழியில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6:10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. திண்டுக்கல் தாண்டி தாமிரபட்டி பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் ஒரு கம்பார்ட்மெண்டில் இருந்து புகை மூட்டம் கிளம்பியது. உடனடியாக பயணிகள் அனைவரும் ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

புகை எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் இருந்த நிலையில் எஞ்சின் பின்புறம் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிவறையிலிருந்து புகை வந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த பயணிகள் மாற்றுப் பெட்டிக்கு மாற்றப்பட்டுள்ளனர். முழுவதும் ஏசி வசதி கொண்ட ரயில் என்பதால் கண்ணாடிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதால் பயணிகள் பத்திரமாக மாற்ற கம்பார்ட்மென்ட்க்கு மாற்றப்பட்டுள்ளனர். புகை மூட்டத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதோடு, அதனை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.