Sleep deprived! Accident caused by speeding Photograph: (pudukottai)
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதி கீழாநிலைக்கோட்டை அருகே உள்ள நெடுங்குடி கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரி திருவிழா சிறப்பு பெற்றது. இந்த கோயிலுக்கு சிவராத்திரி நாளில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் என பல மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் வந்து இரவில் தங்கி சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதி தூராங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 36 பக்தர்கள் தூங்குடி விவேக் என்பவரின் சரக்கு வேனில் ஏறி நேற்று இரவு நெடுங்குடி கைலாசநாதர் கோயிலுக்கு சிவராத்திரி விழா காண வந்துள்ளனர். சரக்கு வாகனத்தை அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் சிவா(19) ஓட்டியுள்ளார். சிவராத்திரி விழா முடிந்து இன்று காலை மீண்டும் சொந்த ஊருக்கு சென்ற போது அறந்தாங்கி - கட்டுமாவடி சாலையில் புறங்காடு கிராமம் அருகே பக்தர்களை ஏற்றிய சரக்கு வாகனம் அதிவேகமாக சென்ற போது ஓட்டுநரின் கண்ணை நித்திரை அசத்த அதிவேக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையோர பனை மரத்தில் மோதிய விபத்தில் வாகனம் சேதமடைந்து வாகனத்தில் இருந்த ரமேஷ்(38) - கனிமொழி(35) தம்பதி படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
மேலும், வாகனத்தில் பயணம் செய்த ராணி, செல்வி, ஜெயா, சந்தியா, மாலதி, அஜய் கார்த்திக், அனுசுயா, கனகவள்ளி, கோமதி, தவமணி, முனியசாமி, சுபா, காளியம்மாள், கருப்பையா, ராமையா, ரம்யா, முனியம்மாள், சத்யவாணி, கணேஷ்குமார் என 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கிடந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை வளாகமே ஒரே பரபரப்பாக காட்சி அளித்தது. சிலர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து நாகுடி போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். வாகனத்தின் அதிவேகமும் ஓட்டுநரின் நித்திரையும் இரு உயிர்களைப் பறித்து பலரை படுகாயப்படுத்திய துயரச் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow Us