உத்தராகண்டின் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காஷிபூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், கங்கன்தீப் சிங் கோலி என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில் கடந்த வாரம், அவர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது, வகுப்பில் இருந்த மாணவர்  சமரத் பாஜ்வா பாடத்தைக் கவனிக்காமலும், வீட்டுப்பாடம் செய்யாமலும் வந்திருந்தார். இதுகுறித்து ஆசிரியர் கங்கன்தீப் சிங் விசாரித்தபோது, மாணவர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், மற்ற மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவரை கன்னத்தில் அறைந்து திட்டியதாகத் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று, ஆசிரியர் கங்கன்தீப் சிங் வழக்கம்போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். பின்னர், வகுப்பு முடிந்து அறையிலிருந்து வெளியே வந்தபோது, மாணவர் சமரத் பாஜ்வா, தனது டிபன் பாக்ஸில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, யாரும் எதிர்பாராதவகையில் ஆசிரியரை நோக்கி சுட்டுள்ளார். இதில், ஆசிரியரின் தோள்பட்டையில் தோட்டா பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அருகில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனடியாக கங்கன்தீப் சிங்கை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, தோள்பட்டையில்  பாய்ந்த தோட்டாவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி, ஆசிரியருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, ஆசிரியரைச் சுட்டுவிட்டு தப்ப முயன்ற மாணவர் சமரத் பாஜ்வாவை, மற்ற ஆசிரியர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

Advertisment

விசாரணையில், மாணவர், “எல்லோருக்கும் முன்னால் கங்கன்தீப் சிங் சார் என்னை அடித்தார். அதனால் ஏற்பட்ட அவமானத்தால் துப்பாக்கியால் சுட்டேன்,” என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, காவல்துறையினர் மாணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதிகளின் உத்தரவின்படி, அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். மேலும், மாணவரின் கையில் துப்பாக்கி எவ்வாறு வந்தது என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.