புகழ்பெற்ற புனித தலமாக விளங்கும் தர்மஸ்தலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் நகரமான தர்மஸ்தலாவில், 800 ஆண்டுகள் பழமையான புனித தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் கோயில் உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண பக்தர்கள் வரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். தலைமுறை தலைமுறையாக ஜெயின் ஹெக்டே குடும்பத்தினரால் இக்கோயில் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, மாநிலங்களவை உறுப்பினரான வீரேந்திர ஹெக்டே கோயிலின் நிர்வாகியாக உள்ளார். சிவபக்தர்களுக்கு அமைதியை அளிக்கும் தர்மஸ்தலா, தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பள்ளி மாணவிகள், மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக, கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவு ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை 4ஆம் தேதி தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘1995ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தினரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களில், சிறுமிகளும் அடங்கும். அந்த பெண்களின் உடல்களை அடக்கம் செய்யுமாறு கோயில் நிர்வாகத்தினர் என்னை மிரட்டிக் கட்டாயப்படுத்தினர். 1998ஆம் ஆண்டு எனது மேற்பார்வையாளர் உடல்களை அடக்கம் செய்ய மறுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்த நேர்ந்த கொடூரங்கள் என்னை பயத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், உடல்களைப் புதைக்க மறுப்பு தெரிவித்தேன். ஆனால், அவர்கள் என்னையும் எனது குடும்பத்தையும் கொன்று பிணங்களோடு பிணங்களாக எரித்து விடுவோம் என்று மிரட்டினார்கள். அதனால் பயந்துபோய் அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தேன். தர்மஸ்தலாவைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் டீசல் பயன்படுத்தி சில உடல்களை எரிக்கவும், மற்றவற்றை அடக்கம் செய்யவும் என்னைக் கட்டாயப்படுத்தினர்.

நான் நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்துள்ளேன். சில குழந்தைகளை பள்ளி சீருடையில் புதைத்துள்ளேன். அதிலும் ஒரு குழந்தை 12 அல்லது 15 வயது இருக்கும், அந்த குழந்தையின் முகம் ஆசிட்டால் சிதைக்கப்பட்டிருந்தது. அதையும் நான்தான் புதைத்தேன். இப்படி ஒரு வருடமல்ல.. இரண்டு வருடமல்ல... 16 வருடங்கள் புதைக்கும் வேலையைச் செய்தேன். அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் மரியாதையுடன் செய்யப்படவில்லை. அந்த குற்ற உணர்வு என்னை துரத்துகிறது. இறந்தவர்களுக்கு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்க இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். தர்மஸ்தலா கோயில் நகரத்தின் நிர்வாகத்துடன் தொடர்புடைய நபர்களால் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, எனது உயிருக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்று அஞ்சி, நான் அண்டை மாநிலத்திற்கு தப்பிச் சென்றேன். ஆனால், எனது மனசாட்சி என்னை தூங்கவிடவில்லை. அதனால் தான் தற்போது இதனை வெளியே கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டப்பூர்வ பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால், இந்த குற்றங்களைச் செய்தவர்களின் பெயர்களை வெளியிடுவேன். அடக்கம் செய்யப்பட்ட இடங்களையும் அடையாளம் காண்பிப்பேன். உடல்களை தோண்டி எடுக்க வேண்டும், பெண்களின் இறப்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்” என்று அவர் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தெரிவித்தார். மேலும், அவர் ரகசியமாகத் தோண்டி எடுத்ததாகக் கூறப்படும் எலும்புக்கூடுகளை ஆதாரமாக சமர்ப்பித்தார்.

Advertisment

அந்த புகாரைத் தொடர்ந்து ஜூலை 13 தேதி, புகாரளித்தவர் தனது அடையாளத்தை மறைத்து உடல் முழுவதும் கருப்பு துணியை அணிந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெல்தங்கடி முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி, காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து வந்தனர். ஆனால், அந்த விசாரணையை எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரித்து வருகின்றது.

விசாரணையின் ஒரு பகுதியாக, தர்மஸ்தலா கிராமத்தின் நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் நேற்று முன் தினம் (28-07-25) சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு நடத்தியது. நேத்ராவதி ஆற்றுக்கு அருகில் உள்ள வனத்தில் 13 இடங்களில் குறி வைத்து உடல்களைத் தோண்டி எடுக்கும் பணியில் சிறப்பு புலனாய்வுக் குழு ஈடுபட்டது.  இதற்கிடையில், கனமழை பெய்ததால் தோண்டும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், கடந்த 2 நாட்களாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் தோண்டப்பட்டும் எதுவும் சிக்காமல் இருந்தது. இந்த நிலையில், தோண்ட ஆரம்பித்த பின் முதல்முறையாக எலும்புக் கூடு கிடைத்துள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. பல உடல்களை புதைத்த கோயிலின் முன்னாள் துப்புரவு ஊழியர் அடையாளம் காட்டிய 6வது இடத்தில் குழி தோண்டப்பட்டது. அப்போது எலும்புக்கூடு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அந்த எலும்புக்கூட்டை மீட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.