sivakasi Student frustrated after college gives him a TC
சிவகாசியில் இயங்கி வரும் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஒரு தன்னாட்சிக் கல்லூரியாகும். அக்கல்லூரியின் முதல்வர் அறைக்கு முன்பாக பெண் ஒருவர், தரையில் அமர்ந்திருக்கும் வீடியோ, தன்னந்தனியாக அவர் போராட்டம் நடத்தி வருகிறார் என்ற தகவலுடன் வைரலாக்கப்பட்டுள்ளது. ராதாமணி என்ற அந்தப் பெண் எதற்காகத் தரையில் அமர்ந்து போராடுகிறார்? மூன்றாமாண்டு பிசிஏ படித்து வரும் அவரது மகன் சூர்யாவுக்கு, அக்கல்லூரி மாற்றுச் சான்றிதழ் கொடுத்ததுதான் காரணம் என்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/26/thaai-2025-09-26-21-57-39.jpg)
வைரலாகப் பரவிவரும் வீடியோவுடன் காணப்படும் குறிப்பில் ‘அய்ய நாடார் ஜானகி அம்மாள் (ANJA) கல்லூரியில் மாணவர் சூர்யா தலையில் முடி அதிகமாக வளர்த்திருந்ததால் கல்லூரி முதல்வர் மாற்றுச் சான்றிதழ் (TC) கொடுத்துவிட்டார், மகனை மீண்டும் கல்லூரியில் சேர்க்கவேண்டும் என்பதே தாயின் கோரிக்கை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் அசோக்கை தொடர்புகொண்டோம். அதில் அவர் “முடி வளர்த்ததற்காகவா மாணவருக்கு TC கொடுப்போம்? வேண்டுமென்றே தவறான தகவலை வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து பரப்பி வருகிறார்கள். அந்த மாணவர் கல்லூரி அலுவலக உதவியாளரின் சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்தார். பிறகு, அவரே மாற்றுச் சான்றிதழ் கேட்டு எழுதிக் கொடுத்தார். அந்தக் கடிதத்தை நீங்களே பாருங்கள்” என்று நமக்கு அனுப்பினார்.
இதனையடுத்து மாணவர் சூர்யாவை தொடர்புகொண்டோம். “காலேஜ்ல பியூன் வேலை பார்க்கிற மணிமாறன் என்பவர் தொடர்ந்து என்னைப் பற்றியும் நான் அணிந்திருக்கும் உடை மற்றும் ஹேர்-ஸ்டைல் குறித்தும் முதல்வர் வரை புகார் சொல்லிக்கொண்டிருந்தார். எங்க துறைத் தலைவரும் (HOD) என்னிடம் வருத்தப்பட்டார். ‘ஏன் இப்படி பண்ணுறீங்க’ன்னு என் உடம்பை முறுக்கிக்கிட்டு பியூன் மணிமாறனிடம் கேட்டேன், அடிக்கப் போனேன். ஆனால், அடிக்கவில்லை. சிசிடிவி-யை செக் பண்ணினால், நான் சொல்வது உண்மை என்பது தெரியும். எங்க அம்மா ராதாமணி கல்லூரி முதல்வர் காலில் விழுந்து கெஞ்சியும் என்னைச் சேர்க்கவில்லை. அதனால்தான், அழுதுகொண்டே அங்கே தரையில் உட்கார்ந்துவிட்டார். நானும் அழுதுகொண்டே வீடியோ எடுத்தேன். மூன்றாமாண்டு படிக்கும் எனக்கு டிசி கொடுத்துவிட்டார்கள். அடுத்து நான் எந்தக் கல்லூரியில் சேரமுடியும்?” என்று பரிதாபமாகக் கேட்டார்.
பத்து வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த சூர்யா, தனது படிப்புக்கான செலவை, வெளியே கே.எஃப்.சி (KFC) போன்ற இடங்களில் பார்ட் டைம் (PART TIME) வேலை பார்த்து அதில் கிடைக்கும் சம்பளத்தைக்கொண்டு கல்லூரியில் செலுத்தி வந்திருக்கிறார். கல்லூரியில் ஐந்தாவது செமஸ்டரை முடித்தால் மட்டுமே, வெளிக் கல்லூரிகளில் அவரால் இந்த ஆண்டு சேரமுடியும். தேர்வு எழுத மட்டும் கல்லூரி அனுமதித்தால் போதும் என்பது அவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
“வேறு எந்தத் தவறும் நான் செய்ததில்லை. தவறான பழக்கங்களும் என்னிடத்தில் இல்லை. கல்லூரி நிர்வாகத்துக்குப் பிடிக்காத என்னுடைய ஹேர்-ஸ்டைலும், அலுவலக உதவியாளரிடம் நான் வெளிப்படுத்திய கோபமும், என்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. இப்போது என் தலைமுடியைப் பார்த்தால் எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. நான் மனம் திருந்திவிட்டேன். கல்லூரி முதல்வர் என்னை ஏற்றுக்கொள்ளவேண்டுமே?” என்று மாறி மாறி நம்மைத் தொடர்புகொண்டு புலம்பினார் சூர்யா.