“காதலைக் கண்டித்த ஏ.என்.ஜே.ஏ. கல்லூரி நிர்வாகம்; விபரீத முடிவெடுத்த மாணவி” என்ற தலைப்பில், கடந்த 22ஆம் தேதி நக்கீரன் இணையதளம் அந்த விவகாரத்தை முதன்முதலாக செய்தியாக வெளியிட்டது.
இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்ற காவல்துறை விசாரணையில், மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் அலுவலக உதவியாளர் மணிமாறன் மீது பி.என்.எஸ். சட்டத்தின் பிரிவு 108ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல்வர் அசோக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தலைமறைவாக உள்ள அலுவலக உதவியாளர் மணிமாறனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இந்த விவகாரத்தில் நடந்தவற்றைப் பார்ப்போம்.
மாணவியின் பின்னணி
சிவகாசியைச் சேர்ந்த பாண்டியராஜன்–முருகேஸ்வரி தம்பதியரின் மகள் சோலைராணி (19). பாண்டியராஜன் 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், முருகேஸ்வரி தனியார் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். சோலைராணி, சிவகாசி–திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.சி.ஏ. படித்து வந்தார்.
புகைப்படம் முதல் கண்டிப்பு வரை
கடந்த ஆண்டு அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவருடன் சோலைராணி பழகி வந்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் மாணவர்கள் மத்தியில் பரவியதையடுத்து, கல்லூரி அலுவலக உதவியாளர் மணிமாறன் மூலம் அது கல்லூரி முதல்வர் அசோக்கின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதன் பின்னர், கடந்த 20ஆம் தேதி சோலைராணியும் அவரது தாயார் முருகேஸ்வரியும் கல்லூரிக்கு அழைக்கப்பட்டனர். அப்போது, மாணவி இவ்வாறான நடத்தையைத் தொடரக் கூடாது என எச்சரிக்கப்பட்டதுடன், மன்னிப்பு கடிதமும் பெறப்பட்டுள்ளது.
வீட்டில் ஏற்பட்ட மனஉளைச்சல்
அன்று வீட்டிற்குத் திரும்பிய பின்னர், தாயாரும் உறவினர்களும் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த சோலைராணி, அதே நாளில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மாணவர் அமைப்பின் போராட்டம்
மாணவியின் மரணத்திற்குக் காரணமான மனஅழுத்தத்திற்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பு எனக் கூறி, கல்லூரி முதல்வர் அசோக், அலுவலக உதவியாளர் மணிமாறன் மற்றும் புகைப்படத்தை பகிர்ந்ததாகக் கூறப்படும் சக மாணவி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி, கடந்த 23ஆம் தேதி கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தின் காரணமாக 24ஆம் தேதி கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
துறை நடவடிக்கையும் கைது சம்பவமும்
இதற்கிடையில், உயர்கல்வித்துறை மதுரை மண்டல துணை இயக்குநர் கலைச்செல்வி கல்லூரியில் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அலுவலக உதவியாளர் மணிமாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் அலுவலக உதவியாளர் மணிமாறன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல்வர் அசோக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கல்வி வட்டாரங்களில் அதிர்வலை
கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இந்தச் சம்பவம், பல்வேறு கல்லூரி நிர்வாகங்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us