விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சின்னக்காமன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அண்மையாகவே அடிக்கடி பட்டாசு தொழிற்சாலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சிவகாசி அருகேயுள்ள சின்ன காமன்பட்டியல் செயல்பட்டு வரும் 'கோகுலேஸ் பயர் ஒர்க்ஸ்' என்ற பட்டாசு ஆலையில் கடந்த 01/07/2025 அன்று காலை வழக்கம்போல் பணிகள் தொடங்கிய பொழுது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறியது.
இதனால் அந்த பகுதியில் புகை மூட்டம் வானுயர சூழ்ந்தது. பட்டாசு ஆலையில் பலர் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் பலரை 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வெடிவிபத்து சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த அழகுராஜா என்ற இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இந்த வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.