Sivakarthikeyan met Nallakannu in person and inquired about his well-being. Photograph: (sivakarthikeyan)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு (வயது 100) வீட்டில் இருந்தபோது கடந்த 22ஆம் தேதி (22.08.2025) கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிகிக்சைப் பெற்று வரும் நல்லக்கண்ணுவை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். தற்பொழுது 'பராசக்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள சிவகார்த்திகேயன் படப்பிடிப்புக்கு இடையே நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும் சிவகார்த்திகேயன் கேட்டறிந்தார்.
திரைத்துறையில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் 'நல்லகண்ணு நலம்பெற வேண்டும்' என அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தது கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.