சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி 75வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி முன்னாள் மாணவர்களால் அஞ்சல் தலை வெளியீடப்பட்டுள்ளது.
சிவகங்கை ராமநாதபுரம் சேது சீமையிலிருந்து பிரித்து 1729-ல் இருந்து சிவகங்கைச் சீமை மன்னர் சசிவர்ணரால் ஆளப்பட்டு வந்தது. அது முதல் சிவகங்கை மன்னர்கள் மக்களுக்கு பல நற்பணிகளைச் செய்து வந்தனர். 1801 முதல் ஜமீந்தாரி முறைக்கு வந்த சிவகங்கையில் அடுத்து வந்த ஆட்சியாளர்களும் கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்கி வந்தனர். 1856-இல் மன்னர் போதகுரு அவர்களால் மன்னர் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் அது உயர்நிலைப் பள்ளியாகி இன்று மேல்நிலைப் பள்ளியாகத் தொடர்ந்து மக்களுக்கு கல்வி சேவையை ஆற்றி வருகிறது.
துரைசிங்க ராஜா திருப்பத்தூரில் ஸ்விஸ் மருத்துவமனை அமைவதற்கு உரிய நிலமும், நிதியும் வழங்கினார். கால்நடை பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கருதி சிவகங்கை நகரில் கால்நடை மருத்துவமனையைத் தமது சொந்தப் பொறுப்பில் நிறுவி நடத்தி வந்தார்.
ஏழை மாணவர்கள் சாதி மத பேதமற்று கல்வி பயில இலவச மாணவ விடுதி ஒன்றினைத் தோற்றுவித்தார். அவருக்குப் பின் வந்த சண்முகராஜா இதனைப் போன்று கிறிஸ்தவ ஆசிரியருக்குப் பள்ளிக்கு நிலம் கொடுத்தார். இன்றும் அந்தப் பள்ளி ராஜகுமாரி ராஜேஸ்வரி கலாசாலை என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை நகரில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மன்னர் மேல்நிலைப் பள்ளி, அலீஸ் மில்லர் மகளிர் பள்ளி, மன்னர் நடுநிலைப் பள்ளி ஆகியவை அவருடைய கல்வித் தொண்டினைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
வள்ளல் அழகப்பர் செட்டியார் தனது கல்விப் பணியைக் காரைக்குடியில் தொடங்க முற்பட்டபோது சண்முகராஜா தனக்குச் சொந்தமான செக்காலைக் கோட்டையில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தைக் கொடுத்து உதவினார். சிவகங்கையில் தனது தந்தையாரான மன்னர் துரைசிங்கம் பெயரில் 1947-இல் கல்லூரி ஒன்றை நிறுவினார். அதற்குத் தனது சொந்த நிலத்தையும் நிதியையும் கொடுத்து கல்லால் ஆன பெருங்கட்டடத்தையும் கட்டித் தந்தார். இன்றைய கல்லூரி அரசு கலை கல்லூரியாக இரு சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. இதில் 11 இளநிலைப் படிப்புகளும் 10 முதுநிலைப் படிப்புகளும் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 75 ஆண்டு நிறைவு விழா கல்லூரியில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1986 முதல் 1989 வரை இக்கல்லூரியில் இளங்கலை அறிவியல் பிரிவில் இயற்பியல் பாடத்தைப் படித்த மாணவர்கள் தாம் படித்த கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக 75 ஆண்டு நிறைவையொட்டி கொல்கத்தாவில் வசிக்கும் முன்னாள் மாணவர் ராஜூ ஸ்ரீனிவாசன் அவர்கள் ஏற்பாட்டில் கல்லூரிப் படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதைக் கல்லூரிக்குப் படமாக (பிரேம்) முதல்வரிடம் வழங்கியதுடன், அன்றைய நாளிலேயே கல்வி மருத்துவம் என மக்களுக்கு உதவி செய்த சிவகங்கை சமஸ்தானத்தின் மதிப்பும் பெருமையும் கருதி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியின் 75 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி மாணவர்களால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையை சிவகங்கை ராணியார் மேதகு டி. எஸ். கே. மதுராந்தகி நாச்சியாரிடம் வழங்கி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பை சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா செய்திருந்தார்.