Advertisment

'உரிமைகளை பறிக்கும் எஸ்.ஐ.ஆர்'-அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

a5668

'Tamil Nadu will fight against the assassination of democracy that dares to snatch it away' - Chief Minister's opinion Photograph: (dmk)

வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று தொடங்குகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பின்படி தமிழக தலைமைச் செயலகத்தில் ஆறு மணியளவில் அவசர கூட்டம் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக அலுவலர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என சொல்லப்பட்டிருந்தது.

Advertisment

வரும் நவம்பர் நான்காம் தேதி முதல் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறது தேர்தல் ஆணையம். தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் மூலமாக இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்ட நாயக் தலைமையில் இந்த கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார். இது குறித்து வெளியான அறிவிப்பில், 'மக்களாட்சி மாண்பைச் சிதைப்பதையும், ஜனநாயகத்தை சின்னாபின்னப் படுத்துவதையும் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்வதே  ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான பழக்கம் ஆகும். அதற்கு ஏற்ப தன்னாட்சி பெற்ற அமைப்புகளையும் தங்களது விருப்பத்துக்கு வளைத்து செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன. முறையான தேர்தல், வெளிப்படையான தேர்தல், நேர்மையான தேர்தல், உண்மையான தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் ஒரே பணியாகும். ஆனால் சமீபகாலமாக தங்களுக்கு விருப்பமான உத்தரவுகள் மூலமாக சந்தேகத்துக்குரிய தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதற்கு வெளிப்படையான உதாரணமாக பீகார் தேர்தல் அமைந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமானது, உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான சதியாக மட்டுமே அமைந்திருந்தது என்பதைக் கண்டோம்.

நம்பிக்கைக்குரிய தகவல்களின்படி பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். பின்னர் சில லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மாண்பமை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவையே தேர்தல் ஆணையம் மதிக்கவில்லை. பின்பற்றவில்லை. செயல்படுத்த தயாராக இல்லை. இந்த ஜனநாயக விரோத செயலை செய்ய தூண்டியது ஒன்றிய பாஜக அரசு ஆகும்.

இந்நிலையில்  SIR  என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாட்டுக்கான தேதிகளை அறிவித்துள்ளார். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதுபோன்ற பணிகளை நடத்துவது என்பது மிகமிகச் சிரமம் ஆகும். வடகிழக்கு பருவமழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த இது போன்ற மிகப்பெரிய பணிகளைச் செய்வது சிரமம் ஆகும். நடைமுறை சாத்தியம் இல்லாத காலத்தை தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது. புகைப்படம் ஒட்டித் தர வேண்டும், பழைய வாக்காளர் பட்டியலை இணையத் தளத்தில் பார்த்து இணைக்க வேண்டும் என்று சொல்வது எல்லாம் பெரும்பான்மை வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று நாங்கள் இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்?

வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்யத் தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.பீகாரில்  இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன. பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றம்சாட்டினார். இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும்.

இது தமிழ்நாட்டுக்கான பிரச்னை ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2 - ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில்,  தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்"  நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் நமது அடுத்த கட்ட செயல்பாடுகள் அமையும் என உறுதி அளிக்கிறோம். மக்களாட்சியையும், மக்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

all parties meeting dmk alliance parties election commision of india
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe