தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைக் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாகக் கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (24.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் சுமார் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 50% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டுத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனையடுத்து அவற்றை கணினிமயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மீதம் உள்ளவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வரை எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். தற்போதைய சூழலில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை வழங்குவதற்கான கால நீட்டிப்பு கிடையாது. எஸ்.ஐ.ஆர். பணியில் 2.43 லட்சம் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வாக்காளர்களாகச் சேர்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “வெளி மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்துள்ளவர்கள் படிவம் 8ஐ கொடுத்து தமிழகத்தில் வாக்காளர்களாக இணையலாம். அதன்படி தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்த 869 பேர் இதுவரை வாக்கு செலுத்த விண்ணப்பித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us