பீகாரைத் தொடர்ந்து வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (S.I.R - Special Intensive Revision) தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (01.12.2025) காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது பூஜ்ஜிய நேரத்தின் போது எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவைத் தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கோண்டார். இந்நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று (02.12.2025) காலை தொடங்கியது. அதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அப்போது எஸ்.ஐ.ஆருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மல்லிகார்ஜூனா கார்கே, திமுகவைச் சேர்ந்த கணிமொழி எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்குள் நுழைந்து முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கால நீட்டிப்பை வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில், “நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகீறது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us