Siddaramaiah son yathindra Controversy within the Congress party over statement
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தலைமை மாற்றம் தொடர்பான சர்ச்சை காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வருகிறது. இதனால் முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்கள், துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் என இரண்டு அணிகளாக செயல்பட்டு தனித்தனியாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் தலைமை மாற்றம் தொடர்பான விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும், கர்நாடகாவில் தலைமை மாற்றம் இருக்காது என்றும், தலைமை தொடர்பான முடிவுகளை கட்சி மேலிடமே எடுக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
தலைமை மாற்றம் குறித்த தகவல் குறித்து பேசிய அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “அத்தகைய தகவல் எதுவும் எனக்கு தெரியாது. இது முதல்வரின் பொறுப்பில் உள்ளது. நாங்கள் அனைவரும் கட்சிக்காக உழைக்கிறோம். அதில் எதிலும் நான் தலையிட மாட்டேன். இது முதல்வரின் பொறுப்பிலும் கட்சியினரின் பொறுப்பிலும் உள்ளது. நான் ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும். யாரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது” எனத் தெரிவித்தார். இருப்பினும், தலைமை மாற்றம் குறித்து ஊகங்கள் உலா வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று வெளிப்படையாக பேசிய முதல்வர் சித்தராமையா, 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை தானே முதலமைச்சராக இருப்பேன் என்று கூறினார்.
இத்தகைய சூழலில், தற்போதைய அமைச்சர்களில் 50 சதவீத பேரை நீக்கி புதிய முகங்களை சித்தராமையா நியமிக்க இருப்பதாக தகவல் வெளியானது. நவம்பர் மாதத்திற்குள் 15 புதிய அமைச்சர்களை நியமித்தால் முதலமைச்சர் உடனடியாக மாற்ற கட்சி மேலிடத்திற்கு கடினமாகக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுத்திருந்ததாகக் கூறப்பட்டது. இதற்கிடையில், கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அனைத்து அமைச்சர்களுக்கும் தனது இல்லத்தில் சித்தராமையா விருந்து அளித்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சித்தராமையாவின் தீவிர ஆதரவாளரும் உள்துறை அமைச்சருமான சதீஷ் ஜர்கிஹோலி சித்தராமையாவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டும் என சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சியுமான (சட்டமன்ற மேலவை உறுப்பினர்) யதீந்திரா சித்தராமையா பேசியிருப்பது தற்போது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய யதீந்திரா, “இன்று, என் தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறார். அவர் தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறார். இந்த கட்டத்தில், முற்போக்கான சிந்தனை கொண்ட, இந்தக் சித்தாந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும், காங்கிரஸை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒருவர் இருக்க வேண்டும். இந்த நேரத்தில், அறிவியல் மற்றும் முற்போக்கான கருத்துக்களை ஏற்றுக்கொள்பவர்களுக்கு, சதீஷ் ஜர்கிஹோலி பொறுப்பேற்று தலைமைத்துவத்தை வழங்குவார்.
காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் பாதையைக் காட்டுவதில் அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோளி முன்னிலை வகிப்பார். இந்த விஷயத்தில் அவர் முன்மாதிரியாக வழிநடத்துவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. சித்தாந்தத்திற்கு அர்ப்பணிப்புள்ள தலைவர்களைக் காண்பது அரிது. அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோளி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார், மேலும் இந்த திசையில் தனது பணியைத் தொடருமாறு நான் அவரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். இவருடைய பேச்சு தொடர்பாக சித்தராமையா ஆதரவாளர்களும், டிகே சிவகுமார் ஆதரவாளர்களும் மாறி மாறி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமல்ல கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
Follow Us