கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற அம்மாநிலச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சி அமையும்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கு கடும் போட்டி மோதல் நிலவியது. இதனையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரையும் நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது. மேலும், அதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலா 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறியதாகத் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, சித்தராமையா மாநில முதல்வராகவும் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

Advertisment

சித்தராமையாக முதல்வர் பதவியேற்று சராசரியாக 2 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பான விவாதத்ததை டி.கே சிவக்குமார் ஆதரவாளர்கள் எழுப்பினர். அதாவது, அடுத்த முதல்வர் சிவக்குமார் இருக்க வேண்டும் என டி.கே சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக கருத்து தெரிவித்து வந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

Advertisment

மாநிலத்தில் தலைமை மாற்றம் ஏற்படக்கூடும் என்று ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் சித்தராமையா தனது பதவிக் காலத்தின் 2.5 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர் தனது அமைச்சரவையை மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2023 மே மாதம் முதல்வராகப் பதவியேற்ற சித்தராமையாவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்தோடு 2.5 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், தற்போதைய அமைச்சர்களில் 50 சதவீதத்தை நீக்க புதிய முகங்களைக் கொண்டு வர சித்தராமையா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. நவம்பரில் சுமார் 15 புதிய அமைச்சர்களைச் சேர்த்தால் முதலமைச்சரை உடனடியாக மாற்ற கட்சி மேலிடத்திற்கு கடினமாக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், வரும் 13ஆம் தேதி அனைத்து அமைச்சர்களுக்கும் சித்தராமையா விருந்து அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

தலைமை மாற்றம் குறித்த தகவல் குறித்து பேசிய அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “அத்தகைய தகவல் எதுவும் எனக்கு தெரியாது. இது முதல்வரின் பொறுப்பில் உள்ளது. நாங்கள் அனைவரும் கட்சிக்காக உழைக்கிறோம். அதில் எதிலும் நான் தலையிட மாட்டேன். இது முதல்வரின் பொறுப்பிலும் கட்சியினரின் பொறுப்பிலும் உள்ளது. நான் ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும். யாரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது” எனத் கர்நாடகாவில் தலைமை மாற்றம் குறித்த ஊகங்கள் கட்சிக்குள் பரவி வருவதால் குழப்பம் நீடிக்கிறது. இந்த ஊகங்கள் இருந்த போதிலும், கர்நாடகாவில் தலைமை மாற்றம் இருக்காது என்று காங்கிரஸ் உறுதியாகக் கூறி வருகிறது. தலைமை தொடர்பான முடிவுகளை கட்சி மேலிடமே எடுக்கும் என்று கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜி.பரமேஷ்வர், சதீஷ் ஜார்கிஹோலி மற்றும் மகாதேவப்பா ஆகிய மூன்று பட்டியலின அமைச்சர்கள் பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்றாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன. முதல்வர் மாற்றம் ஏற்பட்டால் பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. பரமேஷ்வரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து அவர்கள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.