Siddaramaiah instructs to the Chief Secretary ban RSS program in karnataka
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக கடந்த 12ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சமீராபுரா அரசு பள்ளி, வித்யவர்தகா பள்ளிக்குப் பின்னால் உள்ள மைதானம் மற்றும் பிற பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்தினர். பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல மாணவர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பின.
இந்த சூழ்நிலையில் அரசுப் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவின் மகனும், கிராமப்புற வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே, சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், அரசுப் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே பிளவுபடுத்தும் கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ் பரப்புவதாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் தேசிய ஒற்றுமைக்கு எதிரானது என்றும் கூறி, அவற்றை முழுமையாகத் தடை செய்யுமாறு கூறியிருந்தார். இதற்கு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் பிரியங்க் கார்கே எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அரசு நிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாகவும், தமிழ்நாட்டில் உள்ளதைப் போன்ற கட்டுப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியுள்ளார். இந்த விஷயத்தில் தமிழ்நாடு என்ன செய்துள்ளது என்பதை ஆராயுமாறு தலைமைச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை செய்யக் கோரி கடிதம் எழுதியிருந்த அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அச்சுறுத்தல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில உள்துறை அமைச்சகத்திற்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.