Siddaramaiah clashed with D.K. Sivakumar's officials in karnataka bhavan delhi
கர்நாடகா மாநிலத்தில் அடுத்த முதல்வர் பதவிக்கான விவாதம் கடந்த சில தினங்களுக்கு ஏற்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற் கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சி அமையும்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கு கடும் போட்டி மோதல் நிலவியது. இதனையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரையும் நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது. மேலும், அதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலா 2.5 ஆண்டுகள் முதல்வராகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறியதாகத் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, சித்தராமையா மாநில முதல்வராகவும் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர்.
சித்தராமையாக முதல்வர் பதவியேற்று சராசரியாக 2 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பான விவாதத்ததை டி.கே சிவக்குமார் ஆதரவாளர்கள் எழுப்பினர். அதாவது, அடுத்த முதல்வர் சிவக்குமார் இருக்க வேண்டும் என டி.கே சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக கருத்து தெரிவித்து வந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
மாநிலத்தில் தலைமை மாற்றம் ஏற்படக்கூடும் என்று ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் சித்தராமையாவின் சிறப்புப் பணி அதிகாரிகள் (SDO) மற்றும் டி.கே சிவக்குமாரின் சிறப்புப் பணி அதிகாரிகள் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது. அதில், சித்தராமையாவின் அதிகாரி ஒருவர் சக ஊழியர்கள் முன்னிலையில் காலணியை எடுத்து தன்னை தாக்குவதாக மிரட்டியதாக டி.கே சிவக்குமாரின் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் சிறப்புப் பணி அதிகாரி எச்.ஆஞ்சநேயா அளித்த புகாரில், ‘முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரி மோகன் குமார் மற்ற ஊழியர்கள் முன்னிலையில் என்னை செருப்பால் அடிப்பதாக மிரட்டினார். அது என் கெளரவத்தையும் கண்ணியத்தையும் பாதித்துள்ளது. அவர் பொறுப்பேற்றதில் இருந்து எனது கடமைகளை செய்வதில் தொடர்ந்து துன்புறுத்தல் மற்றும் இடையூறுகளை எதிர்கொண்டு வருகிறேன். எனக்கு ஏதேனும் விபத்து நடந்தால், அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த காலங்களில் அவரது பணி புத்தகங்களைப் பார்த்தால் அவர் எம்.எம்.ஜோஷியை அடித்துள்ளார், மூத்த அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்கவில்லை, முதல்வரின் பணியில் சிறப்பு அதிகாரியாக ஈகோவுடன் நடந்து கொண்டார் என்பது தான் இருக்கும். இதுபோன்ற மோதல்களைத் தவிர்ப்பதற்காக முன்னதாகவே இடமாற்றம் கோரினேன். எனவே, மோகன் குமார் மீது குற்றவியல் விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்குங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.