“அம்மா.... கங்கா ம்மா.....” என்று வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய இன்ஸ்பெக்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. அதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்ததால், பொதுமக்கள் பள்ளிகள் உள்ளிட்ட பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இப்படி மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மக்கள் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் வெள்ளநீரை மலர் தூவி வரவேற்று இருக்கிறார். கனமழையின் காரணமாக கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பிரயாக்ராஜ் நகரில், ராஜாபூர், சலோரி உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில் பிரயாக்ராஜ் நகரில் உள்ள, காவல் உதவி ஆய்வாளர் சந்திரதீப் நிஷாத் என்பவரின் வீட்டையும் வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது.
இதனை, ‘புனித நீரான கங்கை... தனது வீட்டைத் தேடி வந்திருக்கிறது’ என்று கூறி எஸ்.ஐ. சந்திரதீப் காவலர் சீருடையில் மலர் தூவி, பால் ஊற்றி மரியாதை செய்து வணங்கியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “கடமைக்குச் செல்லும் வழியில் கங்கை அம்மா எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். கங்கை அம்மாவை வணங்கி ஆசியும் பெற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எஸ்.ஐ. சந்திரதீப் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், வெள்ள நீர் அவரது வீட்டிற்குள்ளே புகுந்துவிட்டது. ஆனால், சிறிதும் அலட்டிக்கொள்ளாத சந்திரதீப், “என்னுடைய தாய் கங்கை...” என்று இடுப்பளவு தண்ணீரில் மேலாடை இன்றி உற்சாகத்துடன் நீரில் நீந்தி மகிழ்ந்துள்ளார். அத்துடன், மூன்றாவது வீடியோவில் எதோ விடுமுறைக்கு நீச்சல் குளத்திற்கு வந்தவர் போன்று வீட்டின் மாடியில் இருந்து டைவ் அடித்து உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த மூன்று வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஒரு பக்கம் மழை வெள்ளத்தால் மக்கள் தவித்துக்கொண்டிருக்க, மறுபக்கம் காவல் உதவி ஆய்வாளர், ‘கங்கை அன்னை.’ என்று கூறி வீட்டிற்கு வந்த வெள்ளநீரை வணங்குவது பேசுபொருளாக மாறியிருக்கிறது.