நெல்லை மாநகர் கே.டி.சி நகர் அஷ்டலட்சுமி தெருவில் நேற்று (27-07-25) கவின் என்ற இளைஞர் மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையில், கவின் ஆணவ கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கவின், சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் நேற்று தனது சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில், தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனை வாசலில் காத்திருந்த போது, அங்கு வந்த ஒரு இளைஞர் கவினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவினின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என இளைஞர் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து சுஜித்தை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

உயிரிழந்த கவினும் சுஜித்தின் சகோதரியும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், தனது சகோதரியிடம் பழகுவது சுர்ஜித்துக்கும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுஜித்தின் தாய் தந்தைக்கும் பிடிக்காமல் இருந்துள்ளது. இதன் காரணமாக சுஜித், கவினை கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கவின் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்தார்களா? அல்லது இருவருமே காதலித்தார்களாக? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையில், காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வரும் சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணக்குமார், கிருஷ்ணவேனி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்த சுஜித் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக கவினின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், காவல் ஆய்வாளர்களான சரவணக்குமார் மற்றும் கிருஷ்ணவேணி தம்பதியை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி கவினின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கல் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் டி.எஸ்.பி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கின் குற்றவாளி பட்டியலில் சுர்ஜித்தின் பெற்றோர்களான 2 காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.