Shubhanshu Shukla informfed felt unwell first day stay at the space station
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய திட்டத்தை ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனம் மூலம் செயல்படுத்தியுள்ளது. ‘ஆக்சியம் - 4’ எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட அமெரிக்கா, போலந்து, மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 பேர் கடந்த 25ஆம் தேதி பகல் 12:01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் புறப்பட்டனர்.
கடந்த 1984ஆம் ஆண்டில் ராகேஷ் ஷர்மா என்ற இந்தியர் ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற நிலையில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி இந்தியராக சர்வதேச விண்வெளிக்குச் செல்லும் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தன.
ஆக்சியம்-4 திட்டத்தின் விண்கலத்தை இந்தியாவின் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா இயக்கிய நிலையில், கடந்த 26ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையில் வெற்றிகரமாக விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தன்னுடைய அனுபவம் குறித்து சுபான்ஷு சுக்லா தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் நாளில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் நாளில் எனக்கு உடல்நிலை சரியில்லை. தற்போது உடல்நலன் தேரி ஆய்வு பணிகளுக்கு தயாராகி அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறேன். வெற்றிடத்தில் நாங்கள் ஏவப்பட்ட எனக்கும் மிகவும் தூக்கம் வந்தது. ஒரு குழந்தையைப் போல விண்வெளியில் நடக்கவும் சாப்பிடவும் கற்றுக்கொள்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கும் மிகவும் அனுபவம் வாய்ந்தவையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.