மத்தியப் பிரதேசத்தில், ஒரு முழுமையான காதல் திரைப்படத்திற்கு இணையான நிகழ்வுகள், 22 வயதான கல்லூரி மாணவி ஒருவரின் வாழ்க்கையில் உண்மையாகவே அரங்கேறியுள்ளன. காதல், ஏமாற்றம், துரோகம், ஹீரோவின் எதிர்பாராத எண்ட்ரி என இந்திய சினிமாவில் பலமுறை திரையில் காணப்பட்ட காதல் கதையின் அனைத்து அம்சங்களும் இவரது வாழ்க்கையில் நிஜமாக நிகழ்ந்திருப்பது, பலரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் எம்.ஐ.ஜி பகுதியில் வசித்து வந்தவர் 22 வயதான ஸ்ரத்தா திவாரி. பி.பி.ஏ படித்து வந்த ஸ்ரத்தா, சர்தக் என்ற இளைஞரை காதலித்து வந்தார். ஆனால், இவர்களின் காதலுக்கு ஸ்ரத்தாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், ஸ்ரத்தாவுக்கு காதலனைப் பிரிய மனமில்லாததால், வீட்டை விட்டு வெளியேறி தனக்கு விருப்பமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பினார். அதன்படி, ஸ்ரத்தாவும் அவரது காதலன் சர்தக்கும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
அந்த வகையில் ஆகஸ்ட் 23 அன்று ஸ்ரத்தா தனது வீட்டிலிருந்து வெளியேறி இந்தூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். ஆனால், கடைசி நேரத்தில் காதலன் சார்தக் ரயில் நிலையத்திற்கு வரவில்லை. மேலும், அவருக்கு ஸ்ரத்தாவைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்று தகவல் அனுப்பியிருக்கிறார். இதனால் மனமுடைந்த ஸ்ரத்தாவுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. பெற்றோர் வேண்டாம் என்று உதறிதள்ளிவிட்டு வந்துள்ளதால் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை, உறுதியளித்தபடி காதலனும் வராததால், புதிய வாழ்க்கை பற்றிய கனவும் தவிடுபொடியாகியிருக்கிறது.
நீண்ட நேரம் இந்தூர் ரயில் நிலையத்திலேயே கதறி அழுத ஸ்ரத்தா, அப்போது அங்கு வந்த ரயில் ஒன்றில் ஏறினார். சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த ரயில் மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் ரயில் நிலையத்திற்கு சென்றது. பின்னர், அந்த ரயில் நிலையத்தில் இறங்கி, நடைமேடையில் அமர்ந்து தனது வாழ்க்கையை நினைத்து ஸ்ரத்தா அழுது கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த, ஸ்ரத்தா பயிலும் அதே கல்லூரியில் எலக்ட்ரீசனாக பணிபுரியும் கரண்தீப் என்ற இளைஞர், ஸ்ரத்தா அழுவதைக் கவனித்தார். பின்னர் அவரிடம் சென்று, "எதற்காக அழுகிறாய்? என்ன நடந்தது?" என்று விசாரித்தார். ஸ்ரத்தாவும், வீட்டை விட்டு வெளியேறியது முதல் காதலன் கைவிட்டு, ரயில் நிலையத்தில் அமர்ந்து அழுவது வரை அனைத்தையும் கரண்தீப்பிடம் விவரித்தார்.
அனைத்தையும் கேட்ட கரண்தீப், "முதலில் வீட்டிற்குச் செல், பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி மன்னிப்பு கேள், எல்லாம் சரியாகிவிடும்" என்று அறிவுறுத்தினார். ஆனால், இதையெல்லாம் கேட்காத ஸ்ரத்தா, "ஒன்று எனக்குத் திருமணம் நடக்க வேண்டும், இல்லையெனில் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று கூறி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். இதனை தடுத்து அவரை காப்பாற்றிய கரண் தீப், “நானே உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். ஸ்ரத்தாவும் அதை ஏற்றுக்கொண்டார். பின்னர், இருவரும் கர்கோன் மாவட்டத்தில் உள்ள மகேஸ்வர் நகருக்கு சென்று, அங்குள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே, மகள் ஸ்ரத்தா காணாமல் போனதால் மிகுந்த வருத்தத்தில் இருந்த அவரது தந்தை அனில் திவாரி, மகளைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 51,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதே சமயம், காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசாரும், ஸ்ரத்தாவைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், 28 ஆம் தேதி அன்று அனில் திவாரிக்கு வந்த செல்போன் அழைப்பில், "அப்பா, நான் பாதுகாப்பாக இருக்கிறேன்" என்று மகள் ஸ்ரத்தா கூறியிருக்கிறார். இதனால் நிம்மதியடைந்த அனில் திவாரி, மகளை மந்த்சவுரில் உள்ள ஹோட்டலில் தங்கி, மறுநாள் காலை இந்தூருக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், மந்த்சவுரில் உள்ள ஹோட்டல்கள் அவர்களுக்கு அறை வழங்க மறுத்துவிட்டன. அதே சமயம், இருவரிடமும் பணம் இல்லாததால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர்
மீண்டும் அனில் திவாரிக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூற, அனில், ரயில் டிக்கெட் வாங்குவதற்காக கரண்தீப்புக்கு பணம் அனுப்பினார். மறுநாள், ஆகஸ்ட் 29 அன்று, ஸ்ரத்தாவும் கரண்தீப்பும் இந்தூருக்குத் திரும்பி, எம்.ஐ.ஜி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
பின்னர், காவல்துறையினர் பெண்ணின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்ரத்தாவின் தந்தை ஆரம்பத்தில் இந்தத் திருமணத்தை ஏற்கத் தயங்கினார்; மகளின் மனநிலை சரியில்லை என்று கூறினார். ஆனால், திருமணப் புகைப்படங்கள் காட்டப்பட்ட பிறகு, குடும்பத்தினர் இறுதியாக இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.
இருப்பினும், அனில் திவாரி, "நான் எனது மகளை 10 நாட்கள் கணவரிடமிருந்து பிரித்து, எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருப்பேன். 10 நாட்களுக்குப் பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பினால், இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்வேன்" என்று நிபந்தனை விதித்தார். அனில் திவாரியின் நிபந்தனைக்கு இருவரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, ஸ்ரத்தா தனது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தூரில் நடந்த இந்த காதல் கதையின் முடிவு, ஒரு திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப் போலவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரத்தா தனது காதல் மனநிலையுடன் இருந்து கரண்தீப்புடன் இணைவாரா, அல்லது அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு கரண்தீப்பைப் பிரிந்து விடுவாரா என்பதை அறிய, அனில் திவாரி விதித்த 10 நாட்கள் கால அவகாசத்திற்காக காத்திருக்க வேண்டும்.
ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் காதலனும் காதலியும் இறுதியில் ஒன்று சேர்வார்களா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்ப்பது போல, இந்தூர் மக்களும் ஸ்ரத்தாவும் கரண்தீப்பும் இணைந்து தங்கள் காதல் பயணத்தைத் தொடருவார்களா என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.