Shoe hit on lawyer who tried to attack B.R. Gavai stir in court premises
உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சனாதனத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் கருத்துகளை தடுப்பது தொடர்பான வழக்கின் விசாரணை அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வந்தது. அப்போது அமர்வு மேடையை நோக்கி வந்த ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் “சனாதனத்தை இழிவு செய்வதை இந்தியா(ஹிந்துஸ்தான்) சகித்துக்கொள்ளாது” என்று கூச்சலிட்டபடி காலணியை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வீச முயன்றார்.
உச்ச நீதிமன்றத்திலேயே தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயர்பாட்டாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை நீக்கி இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது. மேலும், அவரது நுழைவு அட்டையை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டது.
ஆனால், தலைமை நீதிபதி மீது தாக்க முயன்றது எந்தவித தவறும் இல்லை, அதற்காக தான் பயப்படவில்லை, அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தான் செய்த தவறுக்கு எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த நிலையில், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை வழக்கறிஞர் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இன்று (09-12-25) சென்றார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த சில வழக்கறிஞர்கள், பி.ஆர்.கவாய்யை தாக்க முயன்றதற்காக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது வழக்கறிஞர்களில் ஒருவர், தனது காலணியை கழற்றி ராகேஷ் கிஷோரை தாக்கியுள்ளார். உடனே அங்கிருந்த மற்ற வழக்கறிஞர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தி ராகேஷ் கிஷோரை மீட்டனர். நீதிபதி பி.ஆர்.கவாய்யை தாக்க முயன்றதற்கு பதிலடியாக ராகேஷ் கிஷோரை வழக்கறிஞர் ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow Us