இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு சிதையூட்டப்பட்டிருந்த சடலத்தின் மீது திடீரென போலீசார் நீரை ஊற்றி அணைத்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்துள்ள தொட்டியம்பட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உயிரிழந்த அந்த இளைஞருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதி மரியாதை செய்து உடலை தகனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இளைஞரின் மனைவி தன்னுடைய கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

Advertisment

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, தீயணைப்புத்துறை வாகனத்தின் உதவியோடு எரிந்து கொண்டிருந்த இளைஞரின் உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் பிரேதத்தை எடுத்துச் செல்லும் பிரத்தியேக கவர் மூலம் அந்த இளைஞரின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இறுதிச்சடங்கு  செய்து பாதி எரியூட்டப்பட்ட நிலையில் போலீசார் தண்ணீரை ஊற்றி அணைத்து இளைஞரின் உடலை எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.