தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் வினித் ஐஏஎஸ் தலைமையிலான குழு கல்லீரல் விற்பனை விவகாரத்திலும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் கிட்னி விற்பனை விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக கல்லீரலும் சட்டவிரோதமாக விற்பனைக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'விசைத்தறி வேலை செய்து வருகிறேன். வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. இதற்காக சென்னையில் கிட்னியை விற்க முயற்சி செய்தேன். ஆனால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏறப்பட்டது.
இதையடுத்து புரோக்கர்கள், தனக்கு செய்த மருத்துவ செலவுக்கான பணத்தை கேட்டு மிரட்டி கல்லீரலை கொடுக்குமாறு கேட்டனர். கல்லீரல் கொடுத்தால், 8 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என புரோக்கர்கள் தெரிவித்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் கல்லீரலை விற்பனை செய்தேன். தற்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை. உடல் பலவீனம் ஆகிவிட்டது'' என்று கூறி இருந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் வினித் ஐஏஎஸ் தலைமையிலான குழு, கல்லீரல் விற்பனை விவகாரத்திலும் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.