நாங்குநேரியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

திருநெல்வேலி நெல்லை நாங்குநேரி அருகே கடம்போடு வாழ்வு என்ற கிராமத்தில் நேற்று இரவில் இருசக்கர வாகனங்களில் அரிவாளுடன் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து பெரும்பத்து கிராமத்திற்குச் சென்று அங்குள்ள டீக்கடை மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

Advertisment

இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள், பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனை பார்த்த அந்த கும்பல், தப்பியோடியவர்களை விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரச் சம்பவத்தில் வடமாநில தொழிலாளர் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அந்த பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், நெல்சன், ராமசாமி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஒரே இரவில் கிராமங்களுக்கு அத்துமீறி நுழைந்து கிராமத்தினரை கொடூரமாகத் தாக்குதல் நடத்திய கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கஞ்சா போதையில் நடந்த தாக்குதலா அல்லது சாதிய மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த கொடூரக் கொலைகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாங்குநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், நாங்குநேரி உள்பட அதனை சுற்றுவட்டார கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த கொடூரச் சம்பவத்தில் தற்போது வரை 7 பேரை போலீசார் கைது விசாரித்து வரும் நிலையில், இந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட 7 பேரில், சுபாஷ், கல்யாணி ஆகிய இருவர், 2023இல் மாணவர் சின்னதுரையை தாக்கிய வழக்கில் கைதான இருவர் என்பது தெரியவந்துள்ளது. நாங்குநேரியைச் சேர்ந்த சின்னதுரை என்கிற பட்டியலினப் பள்ளி மாணவனை கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரையையும் அவரது சகோதரியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சாதிய ரீதியாக இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது என்பது தெரியவந்தது.  இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.