நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட தகராறில் சக நண்பர்களாலேயே ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டம் தானாவயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்துள்ள தானாவயல் பகுதியில் உள்ள கண்மாயில் வெங்கடேஷ் என்பவர் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது திடீரென நண்பர்களுக்கு இடையே உருவான வாய்த் தகராறில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் வெங்கடேஷின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்த சக நண்பர்கள், அதே இடத்தில் குழிதோண்டி உடலை புதைத்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் ஆறாவயல் போலீசாருக்கு தெரிய வர, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் போலீசார் வெங்கடேஷின் உடலைத்  தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.