Shocking incident in the morning - 10 Tamil Nadu fishermen arrested Photograph: (tamilnadu)
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வரும் சூழல் அதிகரித்து வரும் நிலையில் இன்று அதிகாலையில் 10 மீனவர்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பத்து மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக பத்து மீனவர்களையும் விசைப்படகுடன் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக இலங்கை பகுதியில் புயல் சின்னம் இருந்ததன் காரணமாக தமிழகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலை இருந்தது. இதனைத் தொடர்ந்து மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 மீனவர்களை விசைப்படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us