திருவள்ளூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்கிருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்த நிலையில் சிறுமியை அவருடைய பாட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தொடர்ந்து ஐந்து நாட்களாக சிறுமி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது நபர் ஒருவர் சிறுமியை பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியை தூக்கிச் சென்றது தொடர்பான பகீர்  காட்சி வெளியாகி இருக்கிறது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.