கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் தனியார் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டானது 'Non inderlocking' கேட் என்பதால் அதை மூடுவதற்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்படும் என்ற நிலையில் இன்று காலை ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடுவதற்கான தகவல் முறையாக அளிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. இருப்பினும் இந்த விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மொத்தம் ஐந்து பேர் அந்த பள்ளி வேனில் பயணித்துள்ளனர். ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், செழியன் என்ற சிறுவன் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் போகும் வழியிலேயே செழியன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் விபரம்: ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி, பத்தாம் வகுப்பு சிறுவன் செழியன்.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பணியிலிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா அலட்சியமாக இருந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் தாக்கியதால் போலீசார் பாதுகாப்புடன் பங்கஜ் சர்மாவை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனர். அவரிடம் தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பள்ளி வேனை ஓட்டி வந்த சங்கர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கேட்டை திறந்ததாக பஞ்சஜ் சர்மா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.இந்த சம்பவத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.